ஐபிஎல் 2023: லிவிங்ஸ்டோன் போராட்டம் வீண்; பஞ்சாபின் கனவை கலைத்தது டெல்லி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மீதமுள்ள மூன்று இடங்களைப் பிடிக்க மற்ற அணிகள் தீவிரமாக மல்லுக்கட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற 64ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா இருவரும் களமிறங்கினர். இதில், முதல் 2 ஓவர்களில் டெல்லி அணி 6 ரன்கள் மட்டுமெ எடுத்திருந்தது. அதன் பிறகு 4 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்து பவர்பிளேயில் 61 ரன்கள் குவித்தது. இதையடுத்து வார்னர் மற்றும் பிருத்விஷ் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்தனர். வார்னர் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Trending
ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கிய பிருத்வி ஷா அதன் பிறகு பவுண்டரியும், சிக்ஸருமாக அடித்து இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆனால், அவர் 38 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரி உள்பட 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரைலி ரூஸோவ் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் ஜோடி சேர்ந்து சிக்ஸர் மேல் சிக்ஸர் அடித்து 200 ரன்களுக்கு மேல் ரன்கள் சேர்த்தனர்.
ரைலி ரூஸோவ் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன் பிறகு அவர் 37 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உள்பட 82 ரன்கள் சேர்த்தார். அதே போன்று சால்ட் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் - பிரப்சிம்ரன் சிங் இணை களமிறங்கியது. இதில் ஷிகர் தவான் சந்தித்த முதல் பந்திலேயே இஷாந்த் சர்மாவிடம் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பிரப்சிம்ரனுடன் இணைந்த அதர்வா டைடே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பின் 19 ரன்களில் பிரப்சிம்ரன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் களமிறங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதர்வா டைடேவும் தனது அரைசதத்தைக் கடந்த கையோடு 55 ரன்களில் ரிட்டையர்ட் ஹைர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து வந்த ஜித்தேஷ் சர்மா ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து வந்த ஷாருக் கான் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தாலும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவிங்ஸ்டோன் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் அடுத்து வந்த சாம் கரன் 11, ஹர்ப்ரீத் பிரார் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 33 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. டெல்லி தரப்பில் இஷாந்த் சர்மா கடைசி ஓவரை வீச அதனை எதிர்கொண்ட லிவிங்ஸ்டோன் 2 சிக்சர், ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்து, 5 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 94 ரன்களைச் சேர்த்த நிலையில் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதமூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவும் சிக்கலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now