ஐபிஎல் 2023: ரஹானே காட்டடி; மும்பை இந்தியன்ஸை பந்தாடியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவின் சுழல் பந்துவீச்சில் சிக்கி சுருண்டது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி . ரோகித் தவிர்த்து, இஷான் கிஷன் முதல் அர்ஷத் கான் வரையிலான மும்பையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ரவீந்திர ஜடேஜாவும், மிட்செல் சான்ட்ரும் சேர்த்து கட்டுப்படுத்தினர். சிஎஸ்கே அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மிட்ஷெல் சாட்னர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிசண்டா மகளா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Trending
இதையடுத்து, 158 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு வழக்கம் போல டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் முதல் ஓவரிலேயே கான்வேவை ரன் ஏதுமின்றி வெளியேற்றினார் பெஹ்ரன்டோர்ஃப். அதன்பின் களம்புகுந்தார் சீனியர் வீரர் அஜிங்கியா ரஹானே. இந்த சீசனில் சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ரஹானே, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.
வழக்கமாக கெய்க்வாட் தான் அதிரடி காட்டுவார். ஆனால் இன்று ரஹானே புகுந்து விளையாடினார். பெஹ்ரன்டோர்ஃப்பின் இரண்டாவது ஓவரில் சிக்ஸ் அடித்து பவுண்டரி கணக்கை தொடங்கிய அவர், அர்ஷத் கான் வீசிய ஐந்தாவது ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸ், 4 பவுண்டர்கள் உட்பட 23 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னும் அதிரடியை தொடர்ந்த ரஹானே, 19 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
பியூஸ் சாவ்லா ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து அரைசதம் கடந்த அவர், 27 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 61 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் சென்னை அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் ரஹானே காட்டிய அதிரடி சிஎஸ்கே ரசிகர்களை குஷிப்படுத்தியது.
இதையடுத்து ருதுராஜுடன் இணைந்த் ஷிவம் துபேவும் தனது பங்கிற்கு ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் என 28 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களையும், அம்பத்தி ராயுடு 20 ரன்களையும் சேர்த்தனர்.
Win Big, Make Your Cricket Tales Now