சிஎஸ்கேவிலிருந்து வெளியேறிய காரணத்தை உடைத்த ஜோஷுவா லிட்டில்!
சர்வதேச கிரிக்கெட்டில் 50 போட்டிகள் வரை விளையாடிய அனுபவம் கொண்ட தாம் நெட் பந்து வீச்சாளராக பணியாற்றும் அளவுக்கு எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என சிஎஸ்கேவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோஷுவா லிட்டில் அதிர்ச்சி தகவலை உடைத்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் இந்தியாவில் நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து 405 வீரர்கள் பங்கேற்கும் இந்த ஏலத்தில் சாம் கரண், பென் ஸ்டோக்ஸ் போன்ற தற்சமயத்தில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் வீரர்கள் பெரிய தொகைக்கு விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் அயர்லாந்தை சேர்ந்த இளம் வீரர் ஜோஸ் லிட்டில் இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு வாங்கப்படுவார் என்று சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் கணித்துள்ளார்கள்.
எப்போதுமே தனித்துவமான மவுசை கொண்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர் அயர்லாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 53 போட்டிகளில் 62 விக்கெட்டுகளை 7.65 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்துள்ளார். அந்த வகையில் நல்ல திறமை வாய்ந்த அவரை 2022 சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியும் வாங்காத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களது நெட் பந்து வீச்சாளராக ஒப்பந்தம் செய்தது. ஆனால் 2 வாரங்கள் மட்டுமே சென்னை அணியில் பணியாற்றிய அவர் முழு சீசனிலும் இணைந்து செயல்படாமல் பாதியிலேயே வெளியேறினார்.
Trending
இந்நிலையில் முதன்மை வீரர்கள் காயமடையும் போது அவர்களுக்கு மாற்று வீரராக விளையாடும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்ற வாக்குறுதியுடன் சென்னை நிர்வாகம் தன்னை நெட் பந்து வீச்சாளராக ஒப்பந்தம் செய்ததாக ஜோஸ் லிட்டில் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போல் முதன்மை பவுலர்கள் காயமடைந்த போது தமக்கு வாய்ப்பு கொடுக்காத சென்னை நிர்வாகம் தம்மை போல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் சிலிங்கா ஆக்சனுடன் பந்து வீசக்கூடிய மதீஷா பதிரானாவுக்கு வாய்ப்பு கொடுத்ததாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் 50 போட்டிகள் வரை விளையாடிய அனுபவம் கொண்ட தாம் நெட் பந்து வீச்சாளராக பணியாற்றும் அளவுக்கு எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்ற சுயமரியாதை மற்றும் கௌரவத்துடன் சென்னை அணியிலிருந்து பாதியிலேயே வெளியேறியதாக ஜோஸ் லிட்டில் அதிர்ச்சி தகவலை உடைத்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஜோஷுவா லிட்டில், “அந்த சமயத்தில் இல்லாத ஒன்றை அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அதாவது நான் ஒரு நெட் பவுலர் என்றும் யாராவது காயமடைந்தால் நான் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் பயிற்சியில் கூட நான் விரும்பும் நேரங்களில் பந்து வீச வாய்ப்பு கிடைக்கவில்லை. அனேகமாக 2 ஓவர்கள் வீசியிருப்பேன் என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் லங்கா பிரீமியர் லீக் மற்றும் டி10 தொடர்களில் விளையாடியதால் அவர்கள் என்னை அப்பாவியாக பார்த்திருக்கலாம்.
இருப்பினும் கடந்த வருடங்களில் நான் சிறப்பாக செயல்பட்டிருந்தேன். அதே சமயம் நான் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. மேலும் இதர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் அவர்கள் ஆர்வமாக இருந்தனர். அத்துடன் ஒரு சிலிங்கர் (பதிரனா) சோர்வாக இருக்கும் போது யாரோ ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீச வேண்டிய நெட் பந்து வீச்சாளராக நான் இருக்கிறேன் என்பதை அறிந்த போது, இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பதை உணர்ந்தேன். அதன் காரணமாக 2 வாரத்திலேயே நான் வெளியேறியதால் இந்த ஏலத்திலும் அவர்கள் என்னை வாங்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now