ஐபிஎல் 2023: 42ஆயிரம் மரக்கன்றுகளை நட உதவிய சிஎஸ்கே, குஜராத் அணிகள்!
நேற்று நடைபெற்ற சிஎஸ்கே- குஜராத் அணிகளுக்கு இடையேயான குவாலிஃபையர் போட்டியில் 84 டாட் பந்துகள் வீசப்பட்ட நிலையில், ஒரு டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகள் வீதம் 42,000 மரக்கன்றுகளை பிசிசிஐ நடத்தவுள்ளது.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்த நிலையில், குஜராத் அணி 20 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இதனால் குஜராத் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோத வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நேரலை போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்காத பந்துகளை 0 அல்லது நேரான கோடு அல்லது காலி கட்டமாக தான் காட்டுவார்கள். ஆனால் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பிய சேனல்களில் சென்னை பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்காத பந்துகளில் வழக்கம் போல 0 காட்டுவதற்கு பதிலாக சிறிய அளவிலான பச்சை மரங்கள் காட்டப்பட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
Trending
இருப்பினும் ஒரு அணி பதிவு செய்யும் டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகளை நடுவதற்கு பிசிசிஐ தலைமையிலான ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதே அதற்கான காரணமாகும். குறிப்பாக 15 வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரால் பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கும் பிசிசிஐ அதற்கு உதவிகரமாக இருந்து வரும் இந்திய தாயின் மண்ணை பாதுகாப்பதற்காக இந்தப் பிளே ஆப் சுற்றில் மட்டும் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 34 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணி 50 பந்துகளில் ரன்களை ஏதும் எடுக்கவில்லை. இதன்மூலம் 42,000 மரக்கன்றுகளை நடுவதற்கு சென்னை மற்றும் குஜராத் அணிகள் மறைமுகமாக உதவியுள்ளது. இந்த திட்டத்தை நேற்று சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்த ஜெய் ஷா தலைமையிலான ஐபிஎல் நிர்வாகம் துவங்கியுள்ளது.
அந்த வகையில் குவாலிபயர் 1, 2 எலிமினேட்டர் மற்றும் ஃபைனல் ஆகிய 4 பிளே ஆப் போட்டிகளில் பதிவு செய்யப்படும் டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகள் வீதம் இந்த ஐபிஎல் முடிந்ததும் இந்தியாவின் இயற்கையை பாதுகாக்கும் வகையில் பிசிசிஐ நட உள்ளது. மொத்தத்தில் வரலாற்றில் இல்லாத இந்த புதுமையான திட்டத்துக்கு அனைத்து இந்திய ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்து பிசிசிஐயை பாராட்டுகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now