
இந்தியாவில் நடைபெற்று வரும் 16ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 52ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஷ்வால் - ஜோஷ் பட்லர் இணை களமிறங்கியது. இதில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜெய்ஷ்வால் 18 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 35 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் பட்லருடன் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் வழக்கம்போல வந்தது முதல் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளினார். அதுவரை நிதானம் காத்த பட்லரும் அதிரடியில் மிரட்ட ஹைதராபாத் அணி பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரிமால் தடுமாறி நின்றனர்.