
ஐபிஎல் 16ஆவது சீசன் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் மும்பை மற்றும் லக்னோ அனிகளிடம் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் அணியிடம் சேப்பாக்கம் மைதானத்திலேயே தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் சென்னை அணியில் விளையாடும் வீரர்களை விட, காயத்தால் சிகிச்சை பெற்று வரும் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஜேமிசன் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிமர்ஜித் சிங் காயத்தால் களமிறங்கவில்லை. பின்னர் ஜேமிசனுக்கு மாற்று வீரராக வந்த மகாளா காயமடைந்து சிகிச்சையில் உள்ளார்.
இதுமட்டுமல்லாமல் முன்னணி வீரர் தீபக் சஹார் 2 போட்டிகளில் கூட முழுமையாக ஆடாமல் காயமடைந்துள்ளார். அதேபோல் மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்கு உதவுவார் என்று மினி ஏலத்தில் ரூ.16.25 கோடி கொடுத்து வாங்கப்பட்ட ஸ்டோக்ஸ் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். இது போதாதென சிஎஸ்கே கேப்டன் தோனியும் முழங்காலில் காயத்தால் அவதியடைந்துள்ளார். இப்படி சிஎஸ்கே அணிக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் வீரர்களின் காயத்தால், பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.