ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சிஎஸ்கே!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 5ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது.
ஐபிஎல் 2023 சாம்பியன் யாா் என்பதற்கான பலப்பரிட்சையில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முந்தினம் நடைபெற இருந்த இந்த இறுதி ஆட்டம் மழையால் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக இப்போட்டி கைவிடப்பட்டு ரிஸர்வ் டே-வான நேற்று மீண்டும் தொடங்கியது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் அதே பிளேயிங் லெவனில் களமிறங்கின.
Trending
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல் விருத்திமான் சஹா மற்றும் ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில், சஹா ஆகியோர் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை தீபக் சஹார் தவறவிட்டார். இதனைப் பயன்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அசத்தினார்.
அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் 39 ரன்கள் எடுத்த நிலையில் மகேந்திர சிங் தோனியின் அபாரமான ஸ்டம்பிங்கின் மூலம் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த சாய் சுதர்ஷன் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் விருத்திமான் சஹா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின் 54 ரன்கள் எடுத்திருந்த சஹாவின் விக்கெட்டை தீபக் சஹார் கைப்பற்றினார். ஆனால் அதன்பின் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் சிஎஸ்கேவின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார். தொடர்ந்து பவுண்டரி, சிக்சர்களாக விளாசிய அவர், நடப்பு ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இறுதியில் அவருடன் விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடி காட்ட 19ஆவது ஓவரிலேயே குஜராத் அணி 200 ரன்களை எட்டியது. அதன்பின் பதிரானா வீசிய கடைசி ஓவரின் முதலிரண்டு பந்துகளிலும் இமால சிக்சர்களை பறக்கவிட்ட சாய் சுதர்சன் சதமடிப்பார் என எதிபார்க்கப்பட்ட நிலையில் 46 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 96 ரன்களைச் சேர்த்து வெறும் 4 ரன்களில் தனது சதத்தை தவறவிட்டார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 21 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். சிஎஸ்கே தரப்பில் மதீஷா பதிரானா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன் பின்னர் கடின இலக்கை துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட வந்தது. ஆனால், 3 பந்துகளிலேயே மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்றும் போட்டி ரத்து செய்யப்பட்டுவிடுமோ என்று ரசிகர்களின் எண்ணம் இருந்தது. ஆனால், ஒருவழியாக மழை விடவே, 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. இதில், 15 ஓவர்களில் 171 ரன்கள் தேவை என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.
அதன்படி தொடக்க வீரர்கள் டெவான் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் 4 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்து வலிமையான நிலையில் இருந்தது. பின் 26 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை இழக்க, அதே ஓவரில் 47 ரன்களை எடுத்திருந்த டெவான் கான்வேவும் நூர் அஹ்மத் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே மற்றும் அஜிங்கியா ரஹானே இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 21 ரன்களை எடுத்திருந்த ரஹானே முக்கியமான சமயத்தில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சிக்கொடுத்தார். ஆனாலும் மறுபக்கம் ஷிவம் தூபே ரஷித் கான் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு ஆட்டத்தின் பிரஷரைக் கூட்டினார்.
அவரைத் தொடர்ந்து அம்பத்தி ராயூடுவும் தனது பங்கிற்கு அடுத்தடுத்து இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி என விளாசி 19 ரன்களில் மோஹித் சர்மாவிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து ரசிகர்களின் பெரும் கரகோஷத்துடன் களமிறங்கிய கேப்டன் மகேந்திர சிங் தோனி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனால் கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆட்டத்தின் 14ஆவது ஓவரை அற்புதமாக வீசிய முகமது ஷமி வெறும் 8 ரன்களை மட்டுமே அந்த ஓவரில் கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதில் முதல் சில பந்துகளில் ஒரு சில ரன்கள் மட்டுமே கிடைத்த நிலையில், கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
அதனை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜா முதல் பந்தில் சிக்சரையும், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சிஸ்கே அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியதுடன், ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணி எனும் மும்பை இந்தியன்ஸின் சாதனையையும் சமன் செய்தது.
Win Big, Make Your Cricket Tales Now