
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி நல்ல ஃபார்மில் இருக்கிறார். 41 வயதான தோனி தற்போது அதிரடியாக விளையாடி வருகிறார். லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மூன்று பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். அதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். தோனி களமிறங்கிய இரண்டு இன்னிங்ஸில் மொத்தமாக ஐந்து சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடித்திருக்கிறார்.
தோனி இவ்வளவு சிறப்பாக விளையாடி வரும் நிலையில் அவர் ஏன் தொடர்ந்து கீழ் வரிசையில் களமிறங்குகிறார் என்ற கேள்வி எழுந்தது. நேற்றைய ஆட்டத்தில் கூட சிஎஸ்கே அணியின் நடுவரிசை வீரர்கள் தடுமாறியபோதும் தோனி 8ஆவது வீரராக தான் களமிறங்கினார். அதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தோனிக்கு வயதாகிவிட்டது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இதனால் தோனிக்கு காலில் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக அவரால் முன்பு போல் வேகமாக ரன்கள் ஓட முடியவில்லை. இதன் காரணமாக நடுவரிசையில் விளையாட நேர்ந்தால் ஓடோடி ரன்கள் எடுக்க வேண்டும்.
இதுவே பழைய தோனி என்றால் ஒவ்வொரு பந்துக்கும் இரண்டு ரன்கள் ஓடி அசால்டாக செய்வார். தற்போது காலில் காயம் இருப்பதால் நடுவரிசையில் களம் இறங்கி ரன்கள் ஓட முடியாது என்ற காரணத்தினால் மட்டுமே நோனி கடைசியில் விளையாடுகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கூட தோனி ரன்கள் ஓடும்போது அவருடைய வேகம் குறைவாக இருந்ததாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ரவி சாஸ்திரியும் , ஹைடனும் கருத்து தெரிவித்துள்ளனர்.