சிஎஸ்கேவை ரசிகர்கள் ஒருநாளும் விட்டுக் கொடுத்ததில்லை - டெவான் கான்வே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் ஆதரவு குறித்து அந்த அணியின் தொடக்க வீரர் டெவோன் கான்வே தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணி 218 ரன்கள் மட்டுமே எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த சிஎஸ்கே தொடக்க வீரர் டெவான் கான்வே 45 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த சூழலிலும் சரியான நேரத்தில் அதிரடியை கையில் எடுத்து அணி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் கான்வே-யின் பேட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
Trending
இதனைத் தொடர்ந்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது சிஎஸ்கே வீரர் கான்வே கூறுகையில், “இன்றையப் போட்டியில் வென்றது மகிழ்ச்சி. முதல் சில போட்டிகளில் என்னால் சரியாக ரன்கள் சேர்க்க முடியவில்லை. என்னுடைய பேட்டிங்கில் புதிதாக எதுவும் கிடையாது. வழக்கமாக விளையாடுவது போல் சிறந்த கிரிக்கெட் ஷாட்களை விளையாடவே முயற்சிப்பேன். பிரஷரில் இருக்கும் போது அதற்கேற்ப முயற்சிகளை செய்வேன்.
சென்னை அணிக்காக 2ஆம் ஆண்டில் தொடர்ந்து விளையாடுகிறேன். ரசிகர்கள் ஆதரவு எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக உள்ளது. சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் நேர்மையானவர்கள். சென்னை அணியை ஒருநாளும் விட்டுக் கொடுத்ததில்லை. அதுவும் தோனி இருக்கும் போது கூடுதல் சிறப்பு. அதனால் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
நேற்றைய ஆட்டம் பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றாலும், சிவப்பு ஜெர்சிக்கு இணையாக மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து மைதானத்தில் ரசிகர்கள் இருந்தார்கள். ஒரு பக்கம் ஆர்சிபி என்று கோஷம் எழுந்தால் இன்னொரு பக்கம் சிஎஸ்கே என்று கோஷம் எழுந்தது. பின்னர் விராட் கோலி என்று உற்சாகம் எழுந்தால், இந்தப் பக்கம் தோனி என்று கரகோஷம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now