
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ப்ளே ஆஃப் ஆட்டத்தில் சென்னை அணியும் குஜராத் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட், தர்ஷன் நல்கண்டே வீசிய இரண்டாவது ஓவரில் கேட்ச் கொடுக்க, ஆரம்பமே ஆட்டம் காண நேர்ந்தது. ஆனால் அது நோபால் ஆனதால் சிஎஸ்கே ரசிகர்கள் பெருமூச்சுவிட்டனர்.
அதன்பின் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் டெவான் கான்வே பந்தை சரியாக மீட் செய்ய முடியாமல் தடுமாறினார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 60 ரன்களைச் சேர்த்திருந்த கெய்க்வாட் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அதிரடி வீரர் ஷிவம் தூபே ஒரு ரன்னில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய அஜிங்கியா ரஹானே அதிரடி காட்டத்தொடங்கினாலும் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 17 ரன்களிலும், கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.