
ஐபிஎல் 16ஆவது சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய 24ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இணை களமிறங்கினர். இப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - அஜிங்கியா ரஹானே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.