
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இதில் 2 ஓவர்கள் கூட இந்த இணை தாக்குப்பிடிக்க முடியவில்லை. 4 ரன்கள் எடுத்திருந்த லிட்டன் தாஸ் விக்கெட்டை எடுத்து கேகேஆரின் சரிவை தொடங்கிவைத்தார் முகேஷ் குமார். வெங்கேடஷ் ஐயர் விக்கெட்டை நார்ட்ஜே வீழ்த்தினார். நிதீஷ் ராணாவை இஷாந்த் சர்மா கவனித்துக்கொள்ள, மந்தீப் சிங் விக்கெட்டை எடுத்தார் அக்சர் படேல்.
இதனால் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது கேகேஆர். தொடர்ந்து ரிங்கு சிங், சுனில் நரைன் மற்றும் அங்குள் ராய் போன்றோரை சொற்ப ரன்களில் ஆட்டமிக்க செய்து டெல்லி பவுலர்கள் கெத்துகாட்டினர். கொல்கத்தா தரப்பில் ஓப்பனிங் இறங்கிய ஜேசன் ராய் 43 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க, 16 ஓவர்களில் எல்லாம் கேகேஆர் 9 விக்கெட்டை இழந்திருந்தது. எனினும் கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே ரஸல் அந்த அணிக்காக போராடினார்.