
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
சென்னையிலுள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்து, ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஹாரி ப்ரூக் - அபிஷேக் சர்மா இணை களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஹாரி ப்ரூக் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆகாஷ் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த அஷேக் சர்மா 34 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.