ஐபிஎல் 2023: சீட்டுக்கட்டாய் சரிந்த பேட்டர்ஸ்; தனி ஒருவனாக கெத்து காட்டிய தவான்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார்.
இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியில் ஹென்ரிச் கிளாசென், மயங்க் மார்கண்டே ஆகியோர் களமிறங்குகின்றனர். அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பனுகா ராஜபக்சாவுக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டார்.
Trending
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் பிரப்சிம்ரன் சிங் முதல் பந்திலேயே ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அவரைத் தொடந்து களமிறங்கிய மேத்யூ ஷார்ட் ஒரு ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 4 ரன்களிலும் என அடுத்தடுத்து மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - சாம் கரண் இணை ஒருசில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஆனால் இந்த ஜோடியாலும் நீண்ட நேரம் நீடித்து ரன்களைச் சேர்க்க முடியவில்லை. இதில் சாம் கரண் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்கள் சிக்கந்தர் ரஸா, ஷாரூக் கான் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
ஒருபக்கம் சீட்டுக்கட்டாய் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷிகர் தவான் தனது 51ஆவது ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின்னும் அதிரடி காட்டிய ஷிகர் தவான் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 99 ரன்களைச் சேர்த்து ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மேலும் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிபில் மட்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி 55 ரன்களைச் சேர்த்தது.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now