
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 6 வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கி வருகிறது. முன்னதாக அந்த அணிக்கு 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டத்திலிருந்தே கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி சிறப்பாக வழி நடத்தி 15 சீசன்களில் 13 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வைத்து 4 கோப்பைகளை வெல்வதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவதை ரசிகர்கள் வருடத்திற்கு ஒருமுறை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர். இருப்பினும் விரைவில் 42 வயதை தொடும் அவர் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தம்மை தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்கள் மீது இருக்கும் பாசத்தால் தம்முடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று அவர் தெரிவித்த நிலையில் 2019க்குப்பின் தற்போது சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் தம்முடைய கேரியரின் கடைசி தருணங்களில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின் முடிவில் அவர் மீண்டும் தெரிவித்தார். மேலும் தோனி கடைசி சீசனில் விளையாடுகிறார் என்பதை உணர்ந்து பெங்களூரு, மும்பை போன்ற எதிரணி மைதானங்களிலும் மஞ்சள் உடை அணிந்து ஏராளமான ரசிகர்கள் மெகா ஆதரவு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தாவை மிஞ்சும் அளவுக்கு தாம் ஓய்வு பெறுவதை உணர்ந்து வழியனுப்பும் வகையில் ஆதரவு கொடுத்த உள்ளூர் ரசிகர்களுக்கு தோனி மனதார நன்றி தெரிவித்தார்.