
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் இருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் தங்களது அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்ததுடன், இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.