
ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதல் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் குர்பாஸ்(57) அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுத்துவிட்டு தவறான நேரத்தில் ஆட்டம் இழந்தார். 89 ரன்கள் இருக்கையில் ஐந்து விக்கெட் இழந்து கொல்கத்தா அணி மிகவும் தடுமாறி வந்தது. கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்துவிட்டது என்றே கூறலாம்.
அந்த சமயத்தில் உள்ளே வந்து அதிரடியாக கலக்கிய முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷர்துல் தாகூர் மின்னல்வேக ரன்குவிப்பில் ஈடுபட்டார். 29 பந்துகளில் 68 ரன்கள் விளாசி புதிய சாதனை படைத்ததோடு அணியை சரிவிலிருந்து மீட்டார். 20 ஓவர்கள் முடியும்போது, 204 ரன்கள் குவித்தது கொல்கத்தா அணி. இந்த இலக்கை சேஸ் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கொல்கத்தாவின் லெக் ஸ்பின்னர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரிசையாக விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின், 44 ரன்களுக்கு ஆர்சிபி அணியின் முதல் விக்கெட் சென்றது. 96 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகள் பறிபோயின. இறுதியில் 123 ரன்களுக்கு ஆர்சிபி அணி ஆல் அவுட் ஆனது. கடந்த போட்டியில் 16.2 ஓவர்களில் 172 ரன்களை சேஸ் செய்த அணி, இப்படி மோசமாக தோல்வியை தழுவி இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.