
16ஆவது சீசன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், சேஸிங்கை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்சன் மற்றும் சாஹாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில், முதல் ஓவர் முடிவதற்கு முன்பாக கனமழை பெய்ய தொடங்கியது. கிட்டத்தட்ட அரை மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக ஆடுகளத்தில் அதிகளவு ஈரப்பதம் இருந்தது. குறிப்பாக பிட்ச் அருகே உள்ள பயிற்சி பிட்சில் அதிகளவில் ஈரப்பதம் இருந்தது. இதையடுத்து ஈரப்பதத்தை குறைக்க பஞ்சு, மணல் மற்றும் ரோலர் ஆகியவற்றை பயன்படுத்தி மைதான ஊழியர்கள் பணி செய்து வந்தனர்.
இந்த நிலையில் 11.45 மணிக்கு மேல் ஆட்டம் தொடங்கவில்லை என்றால் ஓவர்கள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 11.30 மணியளவில் நடுவர்கள் சோதனை செய்ய வந்தனர். அப்போது குஜராத் அணியிடன் கேப்டன் ஹர்திக் பாண்டியா நிர்வாகிகளுடன் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.