
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், இந்த சீசனில் லீக் சுற்றில் 20 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கேவிடம் தோல்வி கண்டிருந்தது. எனினும் இந்த தோல்வியில் இருந்து மீண்டெழுந்து இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில், வெற்றிகரமான அணியும் 5 முறை சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸை தனது சொந்த மைதானத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதி சுற்றில் வலுவாக கால்பதித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுவது குஜராத் அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஐபிஎல் தொடரை முதல் இரு முயற்சிகளில் தொடர்ச்சியாக வென்ற முதல் அணி என்ற சாதனையை படைக்கும். கடந்த 4 ஆட்டங்களில் 3 சதங்களை விளாசி உள்ள தொடக்க வீரரான ஷுப்மன் கில், சிஎஸ்கே பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருத்திமான் சாஹா, ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், சாய் சுதர்சன் ஆகியோரும் பேட்டிங்கில் தேவையான நேரங்களில் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.