அடிப்படை தவறுகளால் தோல்வியை சந்தித்துள்ளோம் - ஹர்திக் பாண்டியா!
அடுத்தப் போட்டியில் என் சகோதரர் விளையாடுகிறார். அவரை அகமதாபாத்தில் எதிர்கொள்வேன் என்று நினைக்கிறேன் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்த நிலையில், குஜராத் அணி 20 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இதனால் குஜராத் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோத வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்தப் போட்டியில் செய்த அடிப்படை தவறுகளால் தோல்வியை சந்தித்துள்ளோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் வைத்து பார்க்கும் போது, சுமார் 15 ரன்கள் அதிகமாக விட்டுக்கொடுத்திருக்கிறோம் என்றே எண்ணினேன். பந்துவீச்சின் போது சில நல்ல ஓவர்களை வீசினோம். சில ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தோம். அதனால் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.
Trending
இறுதிப்போட்டிக்கு முன்னேற நாங்கள் இன்னும் ஒரு போட்டியில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதில் வெற்றிபெற தேவையான பயிற்சியை செய்ய வேண்டும். இந்த சீசனில் சிறப்பாகவே விளையாடி இருக்கிறோம். அதனால் சரியான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினாலே போதுமானது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து தோனி கேப்டன்சி பற்றிய கேள்விக்கு, தோனியின் சிறப்பே அதுதான். பவுலர்களை பயன்படுத்தும் விதம், ஃபீல்டிங் செட் அப் என்று அணிக்கு கூடுதலாக 10 ரன்கள் இலக்கு இருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுவார்.
நான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த போது, தோனி சரியான பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். அவருக்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஆடப்பட உள்ள இறுதிப்போட்டியில் மீண்டும் சந்தித்தால் நன்றாக இருக்கும். நாங்கள் பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பனிப்பொழிவு இல்லை என்பதோடு, 15 ரன்களை கூடுதலாக கொடுத்தோம். பேட்டிங், பந்துவீச்சு என்று இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை. அடுத்தப் போட்டியில் என் சகோதரர் விளையாடுகிறார். அவரை அகமதாபாத்தில் எதிர்கொள்வேன் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now