தவறை சுட்டிக்காட்டிய கிளாசெனுக்கு அபராதம்; ரசிகர்கள் கண்டனம்!
நடுவரின் முடிவு குறித்து விமர்சித்ததாக கிளாசனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ- ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை விரட்டிய லக்னோ அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்த போட்டியில் 19ஆவது ஓவரில் லக்னோ வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் வீசிய 3ஆவது பந்தை ஐதராபாத் பேட்ஸ்மேன் அப்துல் சமத் எதிர்கொண்டார். இடுப்பளவுக்கு மேலாக வந்த அந்த பந்தை சமத் சமாளித்து ஆடினார். பந்து வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு எழும்பி வந்ததால் அதனை கள நடுவர் நோ-பால் என்று அறிவித்தார்.
Trending
ஆனால் நடுவரின் முடிவை எதிர்த்து லக்னோ அணியினர் அப்பீல் செய்தனர். இதனையடுத்து வீடியோவை ஆய்வு செய்த 3-வது நடுவர் பேட்ஸ்மேன் சற்று குனிந்தபடி ஆடியதால் அது நோ-பால் இல்லை என்று தெரிவித்தார். இதற்கு அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஹென்ரிச் கிளாசென், சமத் ஆகியோர் தங்கள் அதிருப்தியை தெரிவித்துடன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நடுவரின் முடிவு குறித்து விமர்சித்ததாக கிளாசனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் போட்டியில் தவறிழைக்கும் நடுவர்களுக்கு எந்தவித நடவடிக்கையும் மற்றும் அபராதமும் விதிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now