
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர்-1 ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில் வெற்றிகுறித்து பேசிய எம் எஸ் தோனி, “ஐபிஎல் மிகப்பெரிய தொடராக மாறி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாத போராட்டங்களுக்குப் பிறகு பைனலுக்குள் வந்திருக்கிறோம். மற்ற சீசன்களில் 8 அணிகளுக்கு பழக்கப்பட்டுவிட்டோம். இம்முறை 10 அணிகள் விளையாடுகிறது. ஆகையால் மற்ற பைனல் போல் இதை எடுத்துக்கொள்ள முடியாது. இருப்பினும் பத்தாவது முறையாக வந்திருக்கிறோம். இவை அனைத்திற்கும் அணியில் உள்ள அத்தனை வீரர்களும் கொடுத்த பங்களிப்பு தான் முக்கிய காரணம்.
குஜராத் டைட்டன்ஸ் மிகச்சிறந்த அணி. அவர்கள் எந்த ஸ்கோரையும் சேஸ் செய்யக்கூடியவர்கள். ஆகையால் அவர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இன்றைய போட்டியில் டாசை இழந்ததும் எங்களுக்கு சாதகமாகத்தான் அமைந்துவிட்டது. ஜடேஜாவிற்கு குறிப்பிட்ட பிட்ச் நன்றாக ஈடுபட்டு விட்டால் அவரை அடிப்பது முற்றிலும் கடினம். அதேபோல் பேட்டிங்கில் மொயின் அலியுடன் சேர்ந்து அவர் அமைத்த பார்ட்னர்ஷிப்பை மறந்துவிடக்கூடாது.