
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5ஆவது சாம்பியன் பட்டமாகும். இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் சோ்த்தது.
பின்னா் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, சென்னைக்கான இலக்கு 15 ஓவா்களில் 171 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டது. அதில் சென்னை 15 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சோ்த்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் மற்றும் ஃபோரை அடுத்தடுத்து அடுத்து சென்னை அணியை ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.
வெற்றிக்கு பின் பேசிய சென்னை கேப்டன் தோனி, "சொல்லப்போனால், ஓய்வை அறிவிக்க இதுவே சிறந்த நேரம். இப்போதே ஓய்வை அறிவிப்பது எளிதான விஷயம், ஆனால் 9 மாதங்கள் கடினமாக உழைத்து மேலும் ஒரு சீசனில் விளையாட முயற்சிப்பது பெரிய சவாலாக இருக்கும். அதற்கு எனது உடல் தாங்க வேண்டும். எல்லாம் உடல் ஒத்துழைப்பை பொறுத்து உள்ளது. அதை முடிவு செய்ய இன்னும் 6-7 மாதங்கள் உள்ளன. நான் பெற்ற அன்பின் அளவுக்கு என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான்” என்று கூறினார்.