ஐபிஎல் 2023: கேகேஆரை பந்தாடி சிஎஸ்கே அசத்தல் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணிக்கு வழக்கம்போல் டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் கொடுத்தனர்.
ருதுராஜ் தனக்கே உரித்தான அட்டாக்கிங் பாணியில் இன்னிங்ஸை தொடங்க, கான்வே அவருக்கு பக்கபலமாக இருந்தார். பவர் பிளே ஓவர்களில் பந்துகளை எல்லைக்கோடுகளுக்கு பறக்கவிட்ட இக்கூட்டணி ஓவருக்கு 10 ரன் ரேட்டில் விரைவாக ரன்களை சேர்த்தது. பார்ட்னர்ஷிப் மூலம் 73 ரன்கள் சேர்த்த நிலையில் இக்கூட்டணியை சுயாஷ் சர்மா பிரித்தார்.
Trending
இதில் 35 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் முதல் விக்கெட்டாக வெளியேறினார். இதன்பின் ரஹானே களம்புகுந்தார். கான்வே நிதானம் கடைபிடிக்க, ரஹானே அதிரடி காட்டினார். கான்வே இந்த சீஸனின் 4வது அரைசதத்தை கடந்து 56 ரன்கள் சேர்த்திருந்தபோது வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் அவுட் ஆகினார். இதன்பின் சிஎஸ்கேவின் பேட்டிங் இன்னும் அதிரடி கண்டது. நான்காவது வீரராக களமிறங்கிய ஷிவம் துபே சிக்ஸர் மழை பொழிந்தார்.
ஐந்து சிக்ஸர்களுடன் 20 பந்தில் அரைசதம் தொட்ட துபே, அடுத்த பந்தில் விக்கெட்டானர். அவருக்கு முன்னதாகவே, 24 பந்தில் அரைசதம் கடந்த ரஹானே தனது அதிரடியை தொடர்ந்தார். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாக அமைந்தது. ரஹானே கடைசி வரை ஆட்டமிழக்காமல், 29 பந்துகளை சந்தித்து 71 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடக்கம்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் - ஜெகதீசன் இணை களமிறங்கியது. இதில் சுனில் நரைன் ரன்கள் ஏதுமின்றியும், ஜெகதீசன் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - கேப்டன் நிதிஷ் ரானா இணை ஓரளவு தாக்கிப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின் 20 ரன்களில் வெங்கடேஷ் ஐயர் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் நிதிஷ் ரானாவும் 27 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதையடுத்து களமிறங்கிய ஜேசன் ராய் வந்ததுமே அடுத்தடுத்து மூன்று சிக்சர்களை பதிவுசெய்து தனது எண்ட்ரியைக் கொடுத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜேசன் ராய் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
அதன்பின் 26 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரிகளை விளாசிய ஜேசன் ராய் 61 ரன்கள் எடுத்த நிலையில் மஹீஷ் தீக்ஷனா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதையடுத்து வந்த ஆண்ட்ரே ரஸலும் அதிரடியாக விளையாட முயற்சித்து வெறும் 9 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த டேவிட் வைஸும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் இறுதிவரை போராடிய ரிங்கு சிங் 30 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்தார். இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சிஎஸ்கே தரப்பில் தீக்ஷனா, தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now