ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜோஷுவா லிட்டில்; காரணம் இதுதான்!
வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் அயர்லாந்து அணியில் இடம்பிடித்துள்ளதால், ஐபிஎல் தொடரிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஷுவா லிட்டில் விலகியுள்ளார்.
நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 7 வெற்றிகள் 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் வலுவான முதலிடத்தில் நீடித்து வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பேட்டிங் ஒரு பக்கம் பலம் சேர்த்து வந்தாலும், பந்துவீச்சும் ஒவ்வொரு போட்டியிலும் நல்ல முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கிறது. ரஷீத் கான், நூர் அகமது, ஜோஷுவா லிட்டில் ஆகிய வெளிநாட்டு பவுலர்கள் அசத்தி வருகின்றனர்.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் அயர்லாந்து வீரர் ஜோஷுவா லிட்டில் 4.5 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். இவர் எட்டு போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி 8.21 எகனாமி வைத்திருக்கிறார். இதுதான் இவருக்கு முதல் ஐபிஎல் என்பதுபோல இல்லாமல், நன்றாக அழுத்தங்களை கையாண்டு செயல்படுகிறார் என ஹார்திக் பாண்டியா பாரட்டியுள்ளார்.
Trending
இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒரு பக்கத்தில் அழுத்தம் கொடுத்து வர, மற்றொரு பக்கம் பந்து வீசுபவர்கள் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. அந்த அளவிற்கு நல்ல பங்களிப்பை கொடுத்து வந்தார். இந்நிலையில் வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வருகிற 9ஆம் தேதி தொடங்குகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கு ஜோஷுவா லிட்டில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆகையால், ராஜஸ்தான் அணியுடனான லீக் போட்டி முடிந்த உடன் குஜராத் அணியில் இருந்து வெளியேறி அயர்லாந்து அணிக்காக விளையாடுவதற்கு சென்றுவிட்டார். அயர்லாந்து அணி 2023 உலகக்கோப்பை தொடரில் ஆடுவதற்கு இது முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. அதன்படி, மே 15ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. கடைசி போட்டி முடிவடைந்த பிறகு, மீண்டும் குஜராத் அணியுடன் ஜோஸ்வா லிட்டில் இணைவார் என்றும் தகவல்கள் வந்திருக்கிறது.
இது குறித்து குஜராத் அணியின் கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சொலாங்கி கூறுகையில், “ஜோஷுவா லிட்டில் தனது முதல் ஐபிஎல் தொடரில் நன்றாக செயல்பட்டு இருக்கிறார். பலரையும் ஈர்த்துள்ளார். சர்வதேச அணிக்காக தேர்வாகியுள்ள அவருக்கு வாழ்த்துக்கள். அங்கு நன்றாக செயல்பட்ட பிறகு மீண்டும் குஜராத் அணியில் இணைவார். எங்களது திட்டத்திலும் அவர் இருந்து வருகிறார். முக்கியமான வீரராக செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now