
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, வழக்கம்போல் கெய்க்வாட் - கான்வே இணை துவக்கம் கொடுத்தனர். இரண்டு பவுண்டரிகளை விளாசிய கெய்க்வாட் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே 17 ரன்கள் எடுத்திருந்த கெய்க்வாடை வெளியேற்றினார். இதன்பின் வந்த 16 ரன்களில் ரஹானேவையும் சக்கரவர்த்தி தனது சுழலால் வீழ்த்த, சிறிதுநேரத்தில் கான்வேவும் 30 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
மிடில் ஆர்டரில் வந்த அம்பதி ராயுடுவையும், மொயீன் அலியையும் ஒற்றை இலக்கத்தில் சுனில் நரைன் ஒரே ஓவரில் அவுட் ஆக்கினார். இதன்பின் ஷிவம் துபே பொறுப்புடன் விளையாடினார். கேப்டன் தோனி கடைசி இரண்டு பந்துகளைச் சந்தித்தார். ஆனால் இம்முறை அவரால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. ஷிவம் துபே அதிகபட்சமாக 48 ரன்களைச் சேர்த்தார்.