ஐபிஎல் 2023: சக்ரவர்த்தி அபாரம்; சன்ரைசர்ஸை வீழ்த்தியது கேகேஆர்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 47ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார். வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னிலும், ஜேசன் ராய் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 31 பந்தில் 42 ரன்னில் வெளியேறினார். ஆண்ட்ரூ ரசல் 24 ரன், சுனில் நரைன் 1 ரன், ஷர்துல் தாக்குர் 8 ரன்னிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி 46 ரன்கள் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது.
Trending
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு மயங்க் அகர்வால் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மயங்க் அகர்வால் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அபிஷேக் சர்மா 9 ரன்களிலும், ராகுல் திரிபாதி 20 ரன்களிலும், ஹாரி ப்ரூக் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய கிளாசென் 20 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஐடன் மார்க்ரமும் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதில் மார்கோ ஜான்சென் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் வைபவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் புவனேஷ்வர் குமார், அப்துல் சமாத் ஆகியோர் தலா ஒரு பவுண்டரியை விளாச, ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற சாதகமான சூழல் ஏற்பட்டது.
இன்னிங்ஸின் 20ஆவது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீச, மறுபக்கம் ஹைதராபாத் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட அப்துல் சமாத் 21 ரன்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வருண் சக்ரவர்த்தியின் அபார பந்துவீச்சில் ஹைதராபாத் அணியால் மேற்கொண்டு ரன்களைச் சேர்க்க முடியவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now