பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருப்பது மிகவும் நிம்மதியாக உள்ளது - குர்னால் பாண்டியா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஒரு ரன்னில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது குறித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, நிகோலஸ் பூரனின் அதிரடியான ஆட்டத்தை மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட் விழுந்து தடுமாறியது. இறுதியில் வழக்கம் போல் ரிங்கு சிங் அதிரடி காட்ட லக்னோ பந்துவீச்சாளர்களை விளாசித் தள்ளினார். 19ஆவது ஓவரில் 20 ரன்களை ரிங்கு விளாச கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றி பெற 23 ரன்கள் தேவைப்பட்டன.
Trending
யாஷ் தாகூர் போட்ட முதல் 3 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. 4ஆவது பந்து வைடாக போடப்பட்ட நிலையில், அதில் ஒரு ரன் எடுக்கப்பட்டன. ஆகையால் கடைசி 3 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அதில், 4ஆவது பந்து சிக்ஸர், 5ஆவது பவுண்டரி, கடைசி பந்து சிக்ஸராக அமைய ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. குஜராத், சென்னை அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள நிலையில், லக்னோ அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
வெற்றிக்கு பின் பேசிய குர்னால் பாண்டியா, “பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருப்பது மிகவும் நிம்மதியாக உள்ளது. நாங்கள் கடைசி வரை போராடினோம். இந்தப் போட்டியின் வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே காரணம். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 61 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து விளையாடி வந்தது. ஆனால் 2 நல்ல ஓவர்கள் எங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. ஸ்பின்னர்களுக்கு பந்தை நன்றாக க்ரிப் செய்ய முடிந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் ரொம்பவே ஸ்பெஷல். அவர் களத்தில் இருந்தால், நாம் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இன்று மீண்டும் அவரால் என்ன செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார். டெத் ஓவர்களில் திட்டமிட்டு அதனை செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு பந்துக்கும் நான் பந்துவீச்சாளர்களுடன் பேசினேன். அவர்களின் திட்டம் அறிந்து, சரியாக செயல்படுத்த மட்டுமே அறிவுறுத்தினேன்.
ஆனால் நன்றாக வீசப்பட்ட பந்தையும் பேட்ஸ்மேன் சிக்சர் அடித்தால் நாம் எதுவும் சொல்ல முடியாது. கடைசி ஓவரை யாஷ் தாக்கூருக்கு கொடுக்க உள்ளுணர்வே காரணம். கடந்த போட்டியில் பந்து திடீரென ரிவர்ஸ் ஆனது. இதனால் நான் மோசின் கானிடம் கடைசி ஓவரை கொடுத்தேன். ஆனால் இன்று யாஷ் தாக்கூருக்கு கொடுக்க ஆடுகளத்தின் தன்மையே காரணம். அதேபோல் யாஷ் தாக்கூர் சிறப்பாக பந்துவீசி இருந்ததால், அவரும் உறுதியுடன் இருந்தார்" என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now