
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 50ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி தங்களுடைய 4ஆவது வெற்றியை பதிவு செய்து இந்த சீசனில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் 10ஆவது இடத்தை காலி செய்து 9ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 181/4 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 55 ரன்களும் மஹிபால் லோம்ரர் 54 ரன்களும் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 182 ரன்களை துரத்திய டெல்லிக்கு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறியுடன் அடித்து நொறுக்கிய தொடக்க வீரர்கள் கேப்டன் டேவிட் வார்னர் 22 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட் அபாரமாக செயல்பட்டு 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் அரை சதமடித்து 87 ரன்கள் குவித்தார்.
அவருடன் மிட்சேல் மார்ஷ் 26 ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் ரிலீ ரோசவ் 35 ரன்கள் எடுத்ததால் 16.4 ஓவரிலேயே 187/3 ரன்கள் எடுத்த டெல்லி அதிரடியான வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் வழக்கம் போல பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுக்க தவறிய பெங்களூருவுக்கும் பந்து வீச்சில் ரன்களை வள்ளலாக வாரி வழங்கிய பவுலர்கள் வெற்றியை தாரை வார்த்தனர். குறிப்பாக பெங்களூருவின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் முகமது சிராஜ் வீசிய 5ஆவது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட பில் சால்ட் 3ஆவது பந்திலும் பவுண்டரியை தெறிக்க விட்டார்.