சிஎஸ்கேவிலிருந்து விலக நினைத்த ஜடேஜாவை தடுத்து நிறுத்திய தோனி!
சிஎஸ்கேவிற்கு விளையாடுவதில் உடன்பாடில்லாமல் இருந்துவந்த ரவீந்திர ஜடேஜாவிடம் தோனியே நேரடியாக பேசித்தான் ஒப்புக்கொள்ள வைத்தார் என அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் ஜடேஜா கடந்த ஆண்டு அந்த அணியில் இருந்து விலக நினைத்தார். கடந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்வியை தழுவியதால் ஜடேஜா மீது கடும் விமர்சனம் எழுந்தது.
ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பை எப்படி கையாள்வது என்று ஊட்டி விட முடியாது என தோனி வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மீண்டும் கேப்டன் பொறுப்புக்கு தோனி வந்தார். இதனால் தமக்கு காயம் ஏற்பட்டதாக கூறி ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகினார். அதன் பிறகு சிஎஸ்கே அணியிலிருந்து விலகவும் ஜடேஜா முடிவெடுத்தார்.
Trending
சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே தொடர்பான பழைய பதிவுகளை எல்லாம் ஜடேஜா அழித்தார். இதனால் அவர் நடப்பாண்டு விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் அளித்துள்ள பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், “ஜடேஜா சிஎஸ்கே இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் தோனி ஜடேஜாவிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜடேஜாவுக்கு அனைத்தையும் புரிய வைத்தார்.ஜடேஜா அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைத்தார். அதன் பிறகு சிஎஸ்கே விடமிருந்து ஜடேஜா என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் தோனி கேட்டு அறிந்தார். இதன் பிறகு ஜடேஜா நிலைமையை புரிந்து கொண்டு சிஎஸ்கே அணியில் தொடர்வதாக சம்மதித்தார்.அணியில் பல சிக்கல்கள் இருந்தது. அதை அனைத்தையும் தோனி பூர்த்தி செய்தார்” என கூறினார்.
இதனால் சிஎஸ்கே அணி இந்த சீசனில் எந்த பிரச்சினையும் இல்லாமல் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடுவார்கள் என ரசிகர்கள் நம்புகின்றனர். இதேபோன்று மற்றொரு நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடுவும் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும் அதனை சிஎஸ்கே ஏற்றுக் கொள்ளாததால் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார். கடந்த ஆண்டு களத்திற்கு வெளியே சிஎஸ்கே அணி இது போன்ற பெரிய பிரச்சனைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now