
ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழந்து தட்டுதடுமாறி 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அக்சர் பட்டேல், மனிஷ் பாண்டே இருவரும் தலா 34 ரன்கள் அடித்திருந்தனர். மிச்சல் மார்ஷ் 25 ரன்கள், டேவிட் வார்னர் 21 ரன்கள் அடித்திருந்தனர்.
ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சில் அசத்திய வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் இரண்டு விக்கெட்களும் கைப்பற்றினர். இதில் புவி எகானாமி 2.75 மட்டுமே ஆகும். இந்த இலக்கு மிகவும் எளிதானது. சொந்த மைதானத்தில் இதை கடந்து விட முடியும் என்கிற எதிர்பார்ப்புடன் ஹைதராபாத் அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. மிடில் ஆர்டரிலும் எவரும் அடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டவில்லை.
நன்றாக ஆடிவந்த மயங்க் அகர்வால் 49 ரன்கள், சற்று நம்பிக்கை அளித்து வந்த கிளாஸன் 19 பந்துகளில் 31 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அழுத்தம் ஹைதராபாத் அணியின் பக்கம் திரும்பியது. கடைசி வரை போராடிய வாஷிங்டன் சுந்தர் 24 ரன்கள் அடித்திருந்தார், பினிஷ் செய்துகொடுக்க இயலவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது ஹைதராபாத் அணி. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றியும் பெற்றது.