
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் இன்றைய 25ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதாரபாத் அணியும் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், ரோஹித் சர்மா களமிறங்கினர். அதில் வழக்கம் போல ரோஹித் ஷர்மா முதலில் அவுட்டானார். நடராஜன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் வெளியேறினார். இஷான் கிஷன் 2 சிக்சர்களை விளாசி நம்பிக்கை கொடுத்தாலும், அந்த நம்பிக்கை 38 ரன்களை வரையே நீடித்தது. அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்தார். என்ன அவசரமோ அவுட்டாகி கிளம்பிவிட்டார். 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை 130 ரன்களை சேர்த்தது.
திலக் வர்மா 4 சிக்சர்களை அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17 பந்துகளில் 37 ரன்களைச் சேர்ந்தவரை புவனேஷ்குமார் விக்கெட்டாக்கினார். மறுபுறம் கேமரூன் கிரீன் 40 பந்துகளில் 64 ரன்களை குவித்து இறுதிவரை அவுட்டாகாமல் நிலைத்து நின்றார். இறுதியில் டிம் டேவிட் 16 ரன்களுடன் ரன்அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைச் சேர்த்தது. ஹைதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.