ஐபிஎல் 2023: வார்னர், அக்ஸர் அரைசதம்; மும்பைக்கு 173 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற பிரித்வி ஷா 15 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வர்னருடன் இணைந்த மணீஷ் பாண்டே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
Trending
அதன்பின் 26 ரன்களில் மனீஷ் பாண்டே விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த யாஷ் துல், ரோவ்மன் பாவெல், லலித் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதையடுத்து வந்த அக்ஸர் படேல் தொடக்கம் முதலே அதிராடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் இன்றைய போட்டியிலும் அரைசதம் கடந்தார். மறுபுறம் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக பறக்கவிட்ட அக்ஸர் படேல் 22 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து மாஸ் காட்டினார்.
பின் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 54 ரன்களில் அக்ஸர் படேல் ஆட்டமிழக்க, அதே ஓவரில் 51 ரன்களைச் சேர்த்திருந்த டேவிட் வார்னரும் தனது விக்கெட்டை இழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய குல்தீப் யாதவும் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து அதே ஓவரில் அபிஷேக் பொரெலும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் பெஹ்ரன்டோர்ஃப்,பியூஷ் சாவ்லா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
Win Big, Make Your Cricket Tales Now