
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி எப்போது தான் முடியும் என்று கேட்கும் அளவிற்கு 3ஆவது நாட்களாக நடந்து வருகிறது. கடந்த 28ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருந்தன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால், அன்று இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கியதால் டாஸ் கூட போட முடியவில்லை.
இதன் காரணமாக போட்டி மறுநாள் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் டாஸ் வென்றது. ஆனால், பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சஹா 54 ரன்களையும், இளம் வீரர் சாய் சுதர்சன் 94 ரன்களையும் சேர்த்ததன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 214 ரன்களை குவித்தது.
அதன் பின்னர் கடின இலக்கை துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட வந்தது. ஆனால், 3 பந்துகளிலேயே மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்றும் போட்டி ரத்து செய்யப்பட்டுவிடுமோ என்று ரசிகர்களின் எண்ணம் இருந்தது. ஆனால், ஒருவழியாக மழை விடவே, 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.