ஐபிஎல் போன்ற தொடரில் இப்படி விளையாடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது - டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய பிரப்சிம்ரன் 65 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 103 ரன்களை விளாசினார்.
டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல், பிரவீன் தூபே, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் டேவிட் வார்னர் 27 பந்தில் 54 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
Trending
இறுதியில், டெல்லி அணி 136 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் சார்பில் ஹர்பிரீத் பிரார் 4 விக்கெட்டும், நாதன் எல்லீஸ், ராகுல சஹார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த தோல்வி மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் இருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெளியேறியது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் டேவிட் வார்னர், “பஞ்சாப் அணியை நாங்கள் குறிப்பிடத் தகுந்த இலக்கில் தடுத்து நிறுத்துவோம் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் கொஞ்சம் கூடுதல் ரன்களை எடுத்து விட்டார்கள். பிராப்சிமரன் பேட்டிங் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. மேலும் நாங்கள் சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம். அது எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. நாங்கள் பேட்டிகள் நல்ல தொடக்கத்தை அளித்தோம்.
ஆனால் அதன் பிறகு 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழப்பதெல்லாம் உங்களுக்கு தோல்வியை கொடுக்கும். தன்னம்பிக்கையுடனும் பெருமையுடனும் விளையாட வேண்டும். களத்திற்கு வரும்போது சுதந்திரமாக விளையாடுங்கள். இது நிச்சயமாக எங்களுக்கு ஒரு ஏமாற்றமான ஆட்டமாக அமைந்துவிட்டது. நாங்கள் அளித்த தொடக்கத்தில் இந்த போட்டியில் நாங்கள் வென்றிருக்க வேண்டும்.
இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சரியான அணியை தேர்ந்தெடுத்தோம் என நம்புகிறேன். நடு ஓவர்களில் நான்கு ஐந்து விக்கெட்டுகளை இழப்பதெல்லாம் மிகவும் தவறு. ஐபிஎல் போன்ற தொடரில் இப்படி விளையாடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று தெரிவித்துள்ளார். தற்போது சிஎஸ்கே அணியுடன் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now