
அடுத்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டன.
அதன்படி 10 அணிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 87 வீரர்கள் இந்த மினி ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர். இதில் அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 13 வீரர்களும், குறைந்தபட்சமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 5 வீரர்களும் தேவைப்படுகின்றனர். இதற்காக உலகம் முழுவதும் இருந்து மொத்தமாக 991 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் அந்த 991 வீரர்களில் இருந்து 405 வீரர்களை மினி ஏலத்திற்காக தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணிகளுக்கு கொடுக்கப்படும். அதில் ஒவ்வொரு அணியும் கேட்கும் வீரர்களை தவிர மற்ற வீரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.