
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலத்தில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்தார்கள். அணிகளின் விருப்பத்துக்கேற்ப 405 வீரர்கள் ஏலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள். இந்த 405 வீரர்களில் இருந்து 80 வீரர்கள் ஏலம் வழியாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை ரூ. 18.50 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் கிங்ஸ். இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேம்ரூன் கிரீனை ரூ. 17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிரபல இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்தது. இதனால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக் கூடிய ஒரு வீரர் சிஎஸ்கேவுக்குக் கிடைத்துள்ளார்.