மயங்க் அகர்வாலுக்காக நான் வருந்துகிறேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலை விடுவித்தது பற்றி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 23 அன்று நடைபெறுவதால் அனைத்து அணிகளும் நேற்று தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. கேன் வில்லியம்சன், டுவை பிராவோ, மயங்க் அகர்வால் உள்ளிட்ட பல பிரபல வீரர்கள் தங்களது அணியால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வால் தற்போது விடுவிக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. கடந்தமுறை ரூ. 12 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட மயங்க் அகர்வால், 13 ஆட்டங்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் பஞ்சாப் அணி 6ஆம் இடம் பிடித்தது. இதனால் 2023 ஐபிஎல் போட்டிக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவன் நியமிக்கப்பட்டார்.
Trending
இந்நிலையில் மயங்க் அகர்வால் பற்றி பேசிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “ஒரு பருவத்தில் மோசமாக விளையாடினால் உங்களுக்கு வழங்கப்படும் தொகை உதவிக்கு வராது. அந்த வீரரை விடுவித்து, குறைந்த விலைக்கு அடுத்த ஏலத்தில் வாங்கவோ அல்லது வேறொருவரை தேர்வு செய்யவோ தோன்றும். மயங்க் அகர்வால் நல்ல மனிதர். இந்த விளையாட்டு நல்ல மனிதர்களுக்கானது அல்ல. கேஎல் ராகுலுடன் இணைந்து தொடக்க வீரராக நன்றாக விளையாடினார்.
சில ஆட்டங்களில் ராகுலை விடவும் நன்றாக விளையாடினார். தொடக்க வீரராக நன்கு விளையாடிய இடத்தை அணியின் நலனுக்காக விட்டுக்கொடுத்தார். அதனால் பேட்டிங் இன்னும் கடினமானது. ரன்கள் வரவில்லை. மயங்க் அகர்வாலுக்காக நான் வருந்துகிறேன். ஐபிஎல் ஏலத்தில் பல அணிகளையும் ஈர்ப்பார். தொடக்க வீரராக வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் நன்கு விளையாடி 140 ஸ்டிரைக் ரேட் கொடுக்கக் கூடியவர்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now