
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்து தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், இந்த சீசனில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதேசமயம் தோல்வியடையும் அணி இரண்டாவது குவாலிஃபைர் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும். ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய 3 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றிபெற்றுள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. அதிலும் குறிப்பாக அந்த அணி விளையாடிய 14 லீக் போட்டிகளில் 10 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் மட்டுமே சந்தித்து வலிமைமிக்க அணியாக திகழ்கிறது.