
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய 37ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின. ஜெயப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜாஸ் பட்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 8ஆவது ஓவரில் இவர்களின் பாட்னர்ஷிப்பை ஜடேஜா பிரித்து பட்லரை 27 ரன்களுடன் வெளியேற்றினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் பெரிய அளவில் சோபிக்காமல் 17 ரன்களுடன் நடையைக்கட்டினார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஷ்வால் 43 பந்துகளில் 77 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் தேவ்தட் படிக்கல், துருவ் ஜூரல் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர். துருவ் ஜூரல் 2 சிக்சர்களை அடித்து அதிரடி காட்டினாலும் ரன்அவுட்டாகி ஏமாற்றமளிக்க இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 202 குவித்தது.