
ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முதலில் செல்வது யார் என்று சிஎஸ்கே, குஜராத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குவாலிபையர் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சாஹா, சுப்மன் கில் ஜோடி பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சாஹா 12 ரன்களில் ஆட்டமிழக்க, பவர்பிளே முடிவதற்குள்ளே தோனி சுழற்பந்துவீச்சாளர்களை பந்து வீச அழைத்தார். இதில் கட்டுக்கோப்பாக பந்துவீசிய தீக்சனா கேப்டன் ஹர்திக் பாண்டியாவை 8 ரன்களில் வெளியேற்றினார்.
இதனையடுத்து, ஜடேஜா கையில் பந்து வந்ததும், அவர் ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்தினார். குறிப்பாக சிஎஸ்கே பவுலர்களுக்கு தண்ணீர் காட்டிய சுப்மன் கில்லுக்கு, ஜடேஜா தக்க பதிலடி தந்தார். குறிப்பாக ஒரு பந்து திரும்பியது மட்டுமல்லாமல், திடீரென்று யாருமே எதிர்பாராத வகையில் எம்பியது. இதனை கொஞ்சம் கூட கணிக்காத சுப்மன் கில் ஷாக் ஆகி நின்றார்.