
ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று நடைபெறும் 37ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில், பரபரப்பான கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.
தற்பொழுது ஏழு ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து வெற்றிகள் பெற்று 10 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. எனவே இன்று நடைபெறும் போட்டி ப்ளே ஆப் சுற்று வாய்ப்பைப் பொறுத்தவரை இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமானதுதான்.
சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை ஏறக்குறைய முடிவு செய்து விடும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடந்த இரு ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வர இந்த ஆட்டத்தின் வெற்றி மிக முக்கியம். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.