
கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 8ஆவது லீக் போட்டியில் முதலில் செய்த ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 198 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 192 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றிபெற்றது.
மிகப்பெரிய இலக்கு என்பதால் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான பட்லர் - ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் முதலே அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்லருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பின்னர் வந்த பட்லர் - சஞ்சு சாம்சன் இணைக்கு ரன் ரேட் பிரஷரோடு சேர்ந்து விக்கெட் இழக்காமல் ஆட வேண்டிய பிரஷரும் சேர்ந்தது.
இறுதியில் ஹெட்மையர் மற்றும் துருவ் இணை அதிரடியாக விளையாடி அணியை ஏறத்தாழ வெற்றியை உறுதிசெய்த நிலையில், கடைசியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.