
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று கௌஹாத்தில் நடைபெற்று வாரும் 8ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் - பிரப்சிம்ரன் சிங் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் 28 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, அதன்பின் 34 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 60 ரன்களைச் சேர்த்திருந்த பிரப்சிம்ரன் சிங், ஜோஸ் பட்லரின் அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.