தோனி உடல்நிலை மீது எந்த சந்தேகமும் வேண்டாம் - ஸ்டீபன் ஃபிளம்மிங்!
அடுத்த போட்டியில் தோனி விளையாட முடியுமா? என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் கூறியுள்ளார்.
இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், அபாரமாக விளையாடி 9 சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் உட்பட 92 ரன்கள் விலாசினார். அதற்கு அடுத்த அதிகபட்சமாக மொயின் அலி 23 ரன்கள், சிவந்துபே 19 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர்.
கடைசியாக உள்ளே வந்த தோனி ஏழு பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி உட்பட 14 ரன்கள் விலாசினார். 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 178 ரன்கள் அடித்தது. 179 ரன்கள் இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு, சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். கில் 36 பந்துகளில் 63 ரன்கள் விலாசினார். மற்ற வீரர்கள் ஆங்காங்கே சிறிது பங்களிப்பை கொடுக்க போட்டியின் கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Trending
போட்டியின் 19ஆவது ஓவரின்போது, மகேந்திர சிங் தோனி காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே இந்த போட்டிக்கு முன்பு தோனியின் இடது கணுக்காலில் பிரச்சனை இருக்கிறது. ஆகையால் அவரால் விளையாட முடியாதோ என்கிற பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. போட்டியின் நடுவே மீண்டும் இப்படி ஏற்பட்டிருப்பது அடுத்த போட்டிகளில் அவரால் விளையாட முடியாதோ? என்று கேள்விகள் எழுந்தன. போட்டி முடிந்த பிறகு இது குறித்து எழுந்த கேள்விக்கு பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் பதில் கூறியுள்ளார்.
அதில் “தோனிக்கு ஏற்பட்டிருப்பது சிறிய தசைப்பிடிப்பு மட்டுமே. அது அப்போதே சரி செய்யப்பட்டுவிட்டது. அவரது கால் கணுக்காலில் எந்தவித பிரச்சனையும் இல்லை. இந்த வயதிற்கு என்று சில பிரச்சனைகள் இருக்கும். அது விரைவில் சரி செய்யப்படும். பெரிதளவில் எதுவும் இல்லை. அவரைப் போன்ற மதிப்புமிக்க வீரர் மைதானத்தில் இருப்பது எவ்வளவு முக்கியம் என்று எங்களுக்கும் தெரியும்.
முழு கவனத்துடன் நாங்களும் இருக்கின்றோம். பல வருடங்களாக தான் எவ்வளவு சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்து இருக்கின்றார். இந்த வருடமும் அதை தொடர்வார். ரசிகர்களுக்கு கவலை வேண்டாம். தோனி உடல்நிலை மீது எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now