
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டிக்கான பயிற்சியில் சிஎஸ்கே அணி தற்போதிலிருந்தே ஈடுபட்டு வருகிறது.
அதேசமயம் இத்தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுவதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில்,இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய ஐபிஎல் சீசன்களைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பாருங்கள். அவர்கள் ஒவ்வொரு செயல்களையும் சிறப்பாகவும், தனித்தன்மையுடனும் செய்கின்றனர். துரதிருஷ்டவசமாக அவர்களால் இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது அனைவரும் எதிர்பார்க்காத ஒன்று. அவர்களுக்கென்று தனி வழி உள்ளது.