முகமது ஷமி ஓவரை பிரித்து மேய்ந்த திலக் வர்மா: வைரல் காணொளி!
குஜராத் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக குஜராத் அணியின் ஷுப்மன் கில் 60 பந்துகளில் 129 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து மும்பை அணி சார்பாக நேஹல் வதேரா - ரோஹித் சர்மா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. ஃபீல்டிங்கின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இஷான் கிஷன் களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் இம்பேக்ட் வீரராக நேஹல் வதேரா தொடக்கம் கொடுத்தார். ஆனால் முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே வதேரா 4 ரன்களிள் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷமியின் 2ஆவது ஓவரில் ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணியின் நிலை பரிதாபமானது.
Trending
காணொளியைக் காண இங்கே க்ளிக் செய்யவும்: முகமது ஷமி ஓவரை பிரித்து மேய்ந்த திலக் வர்மா
இந்த நிலையில் திலக் வர்மா களமிறங்கினார். ஷமியை எதிர்கொண்ட 2ஆவது பந்திலேயே சிக்சர் அடித்த திலக் வர்மா அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதற்கு முகமது ஷமி பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மீண்டும் 5ஆவது ஓவரை வீச ஷமி அழைக்கப்பட்டார். அந்த ஓவரை எதிர்கொண்ட திலக் வர்மா தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விளாசி மிரட்டிவிட்டார். 5ஆவது பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கடைசி பந்தில் சிக்சரை விளாசி ஆச்சரியம் கொடுத்தார்.
மொத்தமாக ஷமிக்கு எதிராக 9 பந்துகளை எதிர்கொண்ட திலக் வர்மா 31 ரன்களை விளாசினார். சிறப்பாக விளையாடிய அவர் 14 பந்துகளில் 43 ரன்களை விளாசி ரஷித் கான் பந்தில் போல்டாகி வெளியேறினார். இருப்பினும் திலக் வர்மாவின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் முகமது ஷமி ஓவரில் பவுண்டரிகளை விளாசித்தள்ளிய காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now