இறுதியாக வெற்றி கிடைத்து விட்டது - டேவிட் வார்னர்
வெற்றியைப் பெற்றிருந்தாலும் எந்த இடத்தில் சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசுவோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து இருவது ஓவர்களில் அனைத்து விக்கெடுக்களையும் இழந்து 127 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 43 ரன்கள், ரஸ்ஸல் 38 ரன்கள் அடித்திருந்தனர். இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல், நார்க்கியா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதன்பின் 128 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி பவர்-பிளேவில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 61 ரன்கள் அடித்தது. நன்றாக ஆரம்பித்த டெல்லி இந்த இலக்கை விரைவாக எட்டி சிறப்பான ரன்ரேட்டில் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்த்த போது, மிடில் ஆர்டரில் வரிசையாக விக்கெட்டுகள் இழந்தனர். ஓபனிங்கில் நன்றாக விளையாடிக்கொடுத்த டேவிட் வார்னரும் தவறான நேரத்தில் 57 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். மனிஷ் பாண்டே 21 ரன்கள் அடித்து அவரும் இறுதிவரை நிலைத்து நிற்காமல் ஆட்டமிழந்தார்.
Trending
அக்ஸர் பட்டேல் சரியான நேரத்தில் பொறுப்பை எடுத்துக்கொண்டு அவசரப்படாமல் ஆட்டத்தை கடைசி ஓவர்வரை எடுத்துச் சென்று வெற்றி பெற்றுக் கொடுத்தார். 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் அடித்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இறுதியாக நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
போட்டி முடிந்த பிறகு இது குறித்து பேட்டியளித்த டேவிட் வார்னர், “கடைசியாக அந்த வெற்றி கிடைத்து விட்டது. தொடர் தோல்வியை மாற்றி எழுதிவிட்டோம். இன்றைய போட்டியில் எங்களது பந்துவீச்சு பெருமிதமாக இருந்தது. குறிப்பாக பவர்-பிளே ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியது மிக முக்கிய காரணமாக அமைந்தது.
நாங்கள் எப்போதும் எங்களது அணியினரிடம் வெளிப்படையாக இருப்போம். அந்த வகையில் இன்றைய போட்டியில் வரிசையாக விக்கெட்டுகள் தவறான நேரத்தில் இழந்து சிக்கலாக்கிக்கொண்டோம். வெற்றியைப் பெற்றிருந்தாலும் எந்த இடத்தில் சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசுவோம். இன்றைய போட்டி நன்றாக ஆரம்பித்து, சில தவறுகளால் எங்களுக்கு சுமாராகவே இருந்தது. அடுத்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. அதில் கவனம் செலுத்துவோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now