
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்திவருகிறது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடி தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடும் முயற்சியில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அஜிங்கியா ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர்.
இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அஜிங்கியா ரஹானே 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 3 ரன்களுக்கும், அதிரடி வீரர் சமீர் ரிஸ்வி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் சிஎஸ்கே அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜடேஜாவுடன் இணைந்த மொயீன் அலியும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.