
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 69ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் - அதர்வா டைடே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இவரும் இணைந்து அதிரடியாக விளையாடியதுடன், முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 46 ரன்கள் சேர்த்த நிலையில் அதர்வா டைடே விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த பிரப்ஷிம்ரன் சிங் 71 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷஷாங்க் சிங்கும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ரைலீ ரூஸோவ் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டார். அதன்பின் இறுதியில் கேப்டன் ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடிய 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களைச் சேர்த்தது.